search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பண்டிகை"

    • சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மதுபோதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீப ஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிர்க்கொல்லி மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதை விட வலிமையான காரணங்கள் இருக்க முடியாது.

    மற்றொரு புறம், தீப ஒளி திருநாள் மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மதுபோதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன. மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது.
    • நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்களான காகித ஆலைகள், அச்சுத்தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    நாடு முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.

    2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020-ல் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது.

    தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து கடந்தாண்டு (2022) தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது.

    இந்நிலையில் நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொடர் வெடி விபத்துகள், சீதோஷ்ண நிலை காரணமாக கடைசி கட்ட உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகளால் கடந்த ஆண்டு விற்பனை இலக்கை ஒட்டியே இந்த ஆண்டும் பட்டாசு பட்டாசுகள் விற் றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு ரூ.5,950 கோடிக்கு மட்டுமே பட்டாசுகள் விற்பனையாகி கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.50 கோடிக்கு குறைவாகவே இருந்துள்ளது.

    இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் இளங்கோவன் கூறும்போது, தொடர் மழையினால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு, தொடர் பட்டாசு வெடி விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர் ஆய்வுகள், நடவடிக்கையால் கடந்த ஒரு மாத காலத்தில் பட்டாசு உற்பத்தியில் 10 சதவிகிதம் பாதிக்கப்பட்டது.

    மேலும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழக பட்டாசு விற்பனையில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட நடப்பாண்டில் ரூ.50 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.

    • தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.

    மதுரை

    தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக சென்னை-நெல்லைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி வருகிற 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சென்னை-நெல்லைக்கும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

    மறு மார்க்கத்தில் அதே நாட்களில் நெல்லை- சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் (06068) மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது.
    • குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.

    அப்போது எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது. இதை கண்ட அவர் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயினர். மேலும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.

    ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால், மிரண்டு போன சிறுத்தை பயத்தில் அங்கேயே பதுங்கியது. உடனே தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர், பங்களா வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்ட முயன்றனர். அவர்கள் மேல் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. தீயணைப்பு வீரர்கள் முரளி(வயது 56), குட்டி கிருஷ்ணன்(59), கண்ணன்(54), விஜயகுமார்(32), வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார்(32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை சக தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

    சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

    இதை அறிந்ததும், முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் அருண், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வனத்துறையினர் கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 26 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த வீட்டில் இருந்து சிறுத்தை வெளியேறியது. இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    வனப்பகுதியில் இருந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் போக்கு காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன.
    • கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,050-க் கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன. இதனால் சிவகாசியில் உள்ள பிரபல நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர். 

    வழக்கமான உற்பத்தியை விட இந்த ஆண்டு 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தி அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கடையில் இருந்த 13 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக கருகி பலியானர்.

    இந்த விபத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழுவினர் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் தீவிர சோதனை செய்தனர். இதனால் பல இடங்களில் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் பாதித்தது. பின்னர் நிலைமை சகஜமானது.

    விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்த ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விற்பனையானதாக கூறப்படுகிறது.

    ஆனால் சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டியையொட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.

    பெங்களூரு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தால் அங்கு பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்த நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஓசூர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற்று கடந்த 10 நாட்களாக பட்டாசு விற்பனையில் தீவிரம் காட்டினர். 

    இதனால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிவகாசி உற்பத்தியாளர்கள் பெங்களூரு விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பலர் பல்வேறு ஊர்களில் தற்காலிக கடைகள் அமைத்து பட்டாசுகளை விற்றனர்.

    தீபாவளியையொட்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக அளவில், கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    கறிக்கோழியை பொறுத்தவரை ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.95 செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை ரூ.98 நிர்ணயம் செய்திருந்தாலும், வியாபாரிகள் விலையை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு உயரவில்லை. இருப்பினும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம்.

    கோழிகளின் தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதனால் பெரிய அளவில் பண்ணையாளர்களுக்கு லாபம் இல்லை. கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே வியாபாரிகள் கோழிகளை பிடித்தால் பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அமைப்பு சார்பில் உணவு வழங்கபட்டது.
    • 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் முன் உதவிக்கரங்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜாதி மத வேதமின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிறிஸ்டின் சார்பில் டேவிட், வேளாங்கண்ணி இஸ்லாமிய பைத்துல் மால் தலைவர் ஜலால், இந்து சமயம் சார்பில் வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலய குருக்கள் நீலகண்டன், உள்ளிட்ட 3ம் மதங்களை சேர்ந்த அவர்கள் மத முறைப்படி ஜெபம்,மந்திரம் ஓதி,தொழுகை நடத்தி வேளாங்கண்ணி பேரால யத்தை சுற்றி உள்ள ஏழை எளிய ஆதரவற்ற முதியோர்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி, முட்டை, தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் இனிப்புகள் வழங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்வு பொது மக்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் உதவிகரங்கள் நிறுவனத் தலைவர் ஆண்டனி பிராங்கிளின் ஜெயராஜ்,தலைமை தாங்கினார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜுலியட் அற்புதராஜ்,

    ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார்கள் சார்லஸ், பாத்திராஜ், டேவிட், ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

    லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பஜீருல்லா, பாலசு ப்ரமணியன், மைக்கேல், ஆரோக்கியராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சாமிநாதன், சட்டநாதன், கௌதமன், இன்னர் வீல் சங்க தலைவி கலைச்செல்வி ,

    அன்பே கடவுள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பீட்டர்ராஜ், சாமிநாதன், இஸ்லாமிய நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உதவிக்கரங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள்.
    • கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள் தொடர் விடுமுறையால் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள்.

    இந்த ஆண்டு நாகப்பட்டி னத்தில் நிலவும் தொடர் கனமழை காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி, வேளாங்கண்ணி கடற்கரை, முடி காணிக்கை செலுத்தும் இடம்,கடைவீதி மெழுகுவர்த்தி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் குறைவான கூட்டமே காணப்படுகிறது.

    எப்பொழுதும் அதிக கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம் கலை இழந்து காணப்படுகிறது. கடற்கரையில் அதிக கூட்டம் இல்லாததால் சிரமம் இல்லாமல் குடும்பத்துடன் நீராட முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் தீபா வளிக்கு அதிக வியாபாரம் நடக்கும் என எதிர்பார்த்த வியாபாரி களுக்கு உரிய விற்பனை இன்றி ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

    • குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன
    • பொதுமக்கள் சிலர் குப்பைகளை அவர்களே எரித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 190 முதல் 200 டன் குப்பை சேரும். இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன. நேற்று தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக மாக கொண்டாடினர்.

    இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவுகள் குவிந்தன. இது தவிர சாலையோர கடைகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. அதில் தேவையில்லாத பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் சாலையோரம் குவிந்தன.

    இப்படி பட்டாசு வெடி த்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 20 டன் அளவிற்கு குப்பை சேர்ந்து உள்ளது . அதாவது இன்று காலையில் அனைத்து குப்பைகள் சேர்ந்து சுமார் 220 டன் குப்பைகள் குவிந்தன.

    இதனை தொடர்ந்து இன்று காலையில் வேலூர் மாநகர் முழுவதும் குவிந்திருந்த குப்பைகளை 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் சேர்ந்த தீபாவளி பட்டாசு குப்பைகளை அவர்களே எரித்தனர்.

    • அரசு விடுமுறை இன்று முடிவதால் நாளை முதல், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்.
    • நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் சொந்த ஊர்களுக்கு பயணமாகி உள்ளனர். சிறப்பு பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்ற அவர்கள் கொண்டாட்டம் முடிந்து மீண்ம் சென்னை திரும்ப அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 15-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

    அரசு விடுமுறை இன்று முடிவதால் நாளை முதல், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும். இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பு பயணத்தை தொடங்கினார்கள். ஏற்கனவே அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்களில் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரம் பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

    நாகர்கோவில், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு இன்று பயணம் செய்ய 47 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இதே போல் ஆம்னி பஸ்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். மாலையில் இருந்து பயணத்தை தொடங்குவதால் பஸ், ரெயில் நிலையங்களில் இன்று மாலை முதல் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் பலர் பகல் நேர ரெயில்களில் பயணத்தை தொடங்கி இரவிற்குள் சென்னைக்கு வரவும் திட்டமிட்டு புறப்பட்டனர். நெல்லையில் இருந்து வந்தே பாரத், மதுரையில் இருந்து வைகை, கோவையில் இருந்து இண்டர்சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகல் நேர ரெயில்கள் அனைத்தும் நிரம்பின.

    இதே போல் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர், வந்தே பாரத், கோவை எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காத்திருப்போர் பட்டியலுடன் சென்றன.

    வெளியூர்களில் இருந்து இன்று புறப்பட்டு வரும் பஸ்கள் நெரிசல் இல்லாமல் சென்னை வருவதற்கு போலீசாரும், போக்குவரத்து கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பெருங்களத்தூர், தாம்பரம், மதுரவாயல், வடபழனி, கோயம்பேடு, ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.
    • உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உயிர்சேதம் எதுவுமில்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதில் தீக்காயத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 2021-ல் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.

    இரண்டு ஆண்டுகளாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் உயிரிழப்பு இல்லாமல் தடுக்க தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவ மனைகளில் மொத்தம் 750 படுக்கைகளும் சிறப்பு தீக்காயம் வார்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் மட்டும் லேசான தீக்காயங்களுடன் 15 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். தமிழகம் முழுவதும் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்போ உயிர்சேதமோ ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

    இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுதான். காவல்துறை, தீயணைப்புத் துறை மாசு கட்டுபாட்டு வாரியம், சேவை துறைகள், பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மதுரவாடா பகுதியில் வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

    அப்போது அந்தப் பகுதி முழுவதும் பட்டாசு புகை சூழ்ந்தது. பட்டாசு புகையை சுவாசித்த 2000-க்கும் மேற்பட்டோர் சுவாச கோளாறு ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

    ஒரு சிலருக்கு கடுமையான கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று ஐதராபாத்தில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் வெடிக்கப்பட்டது. சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.
    • ஈஷா சார்பில் புத்தாடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆதியோகி முன்பு ஒன்றாக இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதில் தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, நல்லூர்பதி, சீங்கபதி, சாடிவயல்பதி உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்கள் மாலை 4 மணியளவில் சர்ப்பவாசலில் இருந்து தாம்பூல தட்டுக்களை ஏந்தி ஆதியோகிக்கு ஊர்வலமாக நடந்து சென்றார்கள்.

    பின்னர், ஆதியோகி முன்பு இருக்கும் சப்தரிஷிகளின் திருமேனிகளுக்கு பூ, பழங்களை படைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். மேலும், அங்கு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு பழங்குடி மக்கள் தங்கள் கரங்களாலேயே தீர்த்தங்களை அர்ப்பணித்தனர். இதை தொடர்ந்து பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.

    முன்னதாக, தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி ஆகிய மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுகணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள்  இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர, ஈஷா யோக மையத்தில் இருந்து இருட்டுப்பள்ளம் வரை உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று நேற்றும் இன்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பரிமாற உள்ளனர்.

    ×